10 சதவீதம் வரை சீன பங்குகளைக் கொண்ட நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய தளர்வளித்ததன் எதிரொலியாக, ரூ.4,895.65 கோடிக்கான 29 அந்நிய நேரடி முதலீடு (எஃப்டிஐ) முன்மொழிவுகள் பெறப்பட்டுள்ளதாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
கடந்த மே மாதம் இந்திய அரசு இந்த விதிகளை அறிமுகப்படுத்திய நிலையில், அதற்குப் பின்னர் பெறப்பட்ட எஃப்டிஐ தரவுகளை அரசு வெளியிட்டது.
முன்னர், இந்தியாவுடன் நில எல்லையைப் பகிரும் நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களில் சிறு பங்குகளை வைத்திருக்கும் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய மத்திய அரசின் முன்னறிவிப்பு அனுமதியைக் கட்டாயம் பெற வேண்டும் என விதிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக பல்வேறு தரப்பினரிடமிருந்து வந்த கோரிக்கைகளைத் தொடர்ந்து, சீனா மற்றும் ஹாங்காங் பங்குகளை 10 சதவீதம் வரை கொண்ட நிறுவனங்களுக்கு, துறைசார் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, இந்தியாவில் தானியங்கி முறையில் எஃப்டிஐ மேற்கொள்ள தளர்வளிக்கப்பட்டது.
இருப்பினும், சீனா, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், பூட்டான், மியான்மார் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இந்தியாவுடன் நில எல்லையைப் பகிரும் நாடுகளில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு இந்த விதிவிலக்கு பொருந்தாது.
இதுதொடர்பாக மத்திய வர்த்தக அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், “கடந்த மே மாதம் முதல் ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை திருத்தப்பட்ட நடைமுறையின்கீழ், ரூ.4,895.65 கோடிக்கான எஃப்டிஐ முன்மொழிவுகள் பெறப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டது.
தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, தகவல் மற்றும் தொலைத்தொடர்பு, உற்பத்தி, மருத்துவம், தரவு மையங்கள் மற்றும் போக்குவரத்து சேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. மோரீஷஸ், அமெரிக்கா, கொரியா, ஜப்பான், சிங்கப்பூர், லக்ஸம்பர்க் உள்ளிட்ட நாடுகள் இந்த முதலீட்டு முன்மொழிவுகளை அளித்துள்ளன.