இன்றைய தேதி | AegonEyes இப்போது எங்களைப் பற்றி தொடர்பு தனியுரிமை Newsroom
BREAKING உலகத்தை தமிழில் பாருங்கள் — முக்கிய செய்திகள் உடனுக்குடன்...

அரசின் எத்தனால் கொள்கையால் சர்க்கரை, அரிசி விலை கடும் உயர்வு: காங்கிரஸ் சாடல்

அரசின் எத்தனால் கொள்கையால் சர்க்கரை, அரிசி விலை கடும் உயர்வு: காங்கிரஸ் சாடல்

பெட்ரோலுடன் 20 சதவீதம் எத்தனால் கலக்கும் மத்திய அரசின் கொள்கையால் நாட்டில் சர்க்கரை, வெல்லம், அரிசி, சோள மாவு விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக காங்கிரஸ் சாடியுள்ளது.

இந்த மக்கள் விரோதக் கொள்கையை அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

நாட்டில் கடந்த 3 மாதங்களில் சர்க்கரை விலை 40 சதவீதம், வெல்லம் விலை 24 சதவீதம், அரிசி விலை 16 சதவீதம், சோள மாவு விலை 11 சதவீதம் உயர்ந்துவிட்டதாகக் கூறும் ஊடக செய்தியை இணைத்து, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

மோடி அரசின் தொலைநோக்கு பார்வையில்லாத, மக்கள் விரோதமான இ-20 (பெட்ரோலுடன் 20 சதவீதம் எத்தனால் கலப்பு) கொள்கையால் ஒருபுறம் விலைவாசி உயர்ந்து வருகிறது. மற்றொருபுறம் எரிபொருள் செயல்திறன் குறைவு மற்றும் வாகன பாகங்கள் பழுதால் ஏற்படும் செலவு வாகன ஓட்டிகளின் தலையில் விழுந்துள்ளது.

மத்திய அரசின் தவறான கொள்கையால், சமையலறைகளிலும், சாலைகளிலும் பொதுமக்கள் விலை கொடுத்து வருகின்றனர். 20 சதவீத எத்தனால் கலப்புக்காக கரும்புகள் மற்றும் தானியங்கள் மடைமாற்றப்படுவதால் அவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அதேநேரத்தில், அத்தகைய எரிபொருளை கையாளும் வகையில் வடிவமைக்கப்படாத வாகனங்கள் பழுதடையும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளன.

3 மாதங்களில் விலை உயர்வு: சர்க்கரை உற்பத்தி தரம் கொண்ட 25 லட்சம் டன் கரும்புகள், எத்தனால் தயாரிப்புக்காக மடைமாற்றப்பட்டது இப்போது தெளிவாகியுள்ளது. இதன் விளைவாக, கடந்த மூன்று மாதங்களில் சர்க்கரை விலை ஒரு கிலோ ரூ.48-இல் இருந்து ரூ.67-ஆகவும், வெல்லம் ஒரு கிலோ ரூ.50-இல் இருந்து ரூ.65-ஆகவும் உயர்ந்துள்ளது. அரிசி, சோள மாவு விலையும் முறையே 16 சதவீதம், 11 சதவீதம் உயர்ந்துள்ளன. கால்நடை தீவனங்களின் விலை 10.34 சதவீதம் அதிகரித்துள்ளது.

எத்தனால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தனது கூட்டாளிகளுக்கு லாபத்தை அதிகரிப்பதற்காக மத்திய அரசு அவசரகதியில் மேற்கொண்ட நடவடிக்கையால் வாகன ஓட்டிகள் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். தங்களுக்கு விருப்பமான எரிபொருளை தேர்வு செய்யும் வாய்ப்புகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிவடைந்துள்ள போதிலும், 20 சதவீத எத்தனால் கலப்பால் செலவு மிச்சமான போதிலும், பெட்ரோல் விலையில் எந்த குறைப்பும் மேற்கொள்ளப்படாதது ஏன்?

மத்திய அரசின் மக்கள் விரோத இ-20 கொள்கை ஏற்கத்தக்கதல்ல; அதை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுவில் இ-20 கொள்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

பெட்டி...

மத்திய அரசு நிராகரிப்பு

எத்தனால் தயாரிப்புக்காக மடைமாற்றப்பட்டதால் சர்க்கரை விலை உயர்ந்துவிட்டது என்ற கூற்றை மத்திய அரசு திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘நாட்டில் நான்கில் மூன்று பங்கு எத்தனால் உற்பத்தியானது, தானியங்கள் குறிப்பாக சோளம் வாயிலாகவே மேற்கொள்ளப்படுகிறது. தற்போதைய சர்க்கரை விலை உயர்வுக்கு எதிர்பார்த்ததைவிட குறைவான உற்பத்தி, பண்டிகை காலத்தையொட்டி தேவை அதிகரிப்பு, காலநிலை சார்ந்த பயிர்ச்சேதங்கள், உலகளாவிய விநியோகக் கட்டுப்பாடுகள், சில இடங்களில் காணப்படும் பதுக்கல் உள்ளிட்டவையே காரணம். சர்க்கரை விலை உயர்வைத் தடுக்கவும், போதிய இருப்பை உறுதி செய்யவும் நாடு முழுவதும் சர்க்கரை விநியோகஸ்தர்கள் 400 டன்கள் வரையே இருப்பு வைக்க அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. பெருமளவில் சர்க்கரை கொள்முதல் செய்வோர், செப்.1-ஆம் தேதிமுதல் தங்களின் 15 நாள்கள் பயன்பாட்டுக்கு மிகுதியான சர்க்கரையை இருப்பு வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 10 லட்சம் டன் சுத்திகரிக்கப்படாத சர்க்கரையை வரியின்றி இறக்குமதி செய்யவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆதாரம் Dinamani https://www.dinamani.com/india/2026/Aug/22/sharp-rise-in-sugar-and-rice-prices-due-to-governments-ethanol-policy-congress-slams-move

Share Facebook X WhatsApp Telegram