மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்ற ஆவணி மூலத் திருவிழாவின் ஒரு முக்கிய நிகழ்ச்சியாக, சிவபெருமான் பாணனுக்காக சித்தனின் அங்கங்களை வெட்டிய ஐதீக லீலை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மன் (வலது) மற்றும், பிரியாவிடையுடன், வலது கையில் வாளும், இடது கையில் கேடயமும் ஏந்திய சுந்தரேசுவரர் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
ஆவணி மூலத் திருவிழா 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை முதல் தினமும் ஒவ்வொரு ஐதீக லீலையை விளக்கும் வகையில் திருவிழா நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
ஐதீகப்படி, முன்னொரு காலத்தில் மதுரையில் வாழ்ந்த வாள் வித்தை ஆசிரியரான பாணனிடம் வித்தைகளைக் கற்ற சித்தன் என்ற சீடன், தன் குருவின் மனைவியிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றான். இதனை அறிந்த பாணனின் மனைவி, சோமசுந்தரரிடம் வேண்டுதல் விடுத்தாள். அதனை ஏற்று, பாணன் வேடம் தரித்து எழுந்தருளிய சிவபெருமான், சித்தனின் அங்கங்களை வெட்டி வீழ்த்தினார் என்பதே இந்த லீலையின் கதை.
இந்த லீலையை விளக்கும் வகையில், சுந்தரேசுவரரின் வலது திருக்கரத்தில் வாளும், இடது திருக்கரத்தில் கேடயமும் வைக்கப்பட்டிருந்தன. மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர், சிவபெருமான் பாணனுக்காக சித்தனின் அங்கங்களை வெட்டிய திருவிளையாடல் பக்தர்களுக்கு விளக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மகா தீபாரதனை நடைபெற்றது.
இரவு நிகழ்வாக, வெள்ளி ரிஷப வாகனத்தில் மீனாட்சி அம்மனும், தங்க ரிஷப வாகனத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் நான்கு ஆவணி மூல வீதிகளிலும் வலம் வந்து கோயிலை வந்தடைந்தனர். வழிநெடுகிலும் பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.