இன்றைய தேதி | AegonEyes இப்போது எங்களைப் பற்றி தொடர்பு தனியுரிமை Newsroom
BREAKING உலகத்தை தமிழில் பாருங்கள் — முக்கிய செய்திகள் உடனுக்குடன்...

மின்வாரியத்துக்கு வழங்கிய நிலத்தை திரும்பப் பெறக் கோரிய மனு தள்ளுபடி

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள 15 கிரவுண்ட் நிலம் தமிழக மின்வாரியத்துக்காக கடந்த 1990-ம் ஆண்டு வழங்கப்பட்டது.

தற்போது அதன் ஒரு பகுதியில் மின்கட்டண வசூல் மையம் செயல்படுகிறது. மீதியுள்ள காலி நிலத்தை திரும்பப் பெறக் கோரி வழக்கறிஞர் எம்.டி.அருணன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நடைபெற்ற வாதம்: மனுதாரர் தரப்பு: வழக்கறிஞர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த முடியாத அளவுக்கு உயர் நீதிமன்ற வளாகத்தில் இடநெருக்கடி நிலவுகிறது.

இதுபோன்ற காலி இடங்களை மீட்டு, வாகன நிறுத்தம், நீதிமன்றக் கட்டிடங்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண்: மனுதாரர் குறிப்பிடும் இடத்தில் உயர் நீதிமன்றத்துக்கான துணை மின்நிலையம் இயங்கி வருகிறது. இங்கிருந்து உயர் நீதிமன்றம் மட்டுமின்றி, அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனை, துறைமுகம் போன்றவற்றுக்கும் மின் விநியோகம் செய்யப் படுகிறது.

மேலும் கூடுதலாக 5,500 கிலோவாட் திறன் கொண்ட துணை மின்நிலையம் அமைக்க வேண்டியுள்ளது. பாதுகாப்பு கருதி மின் மாற்றிகள் இடையே காலி இடம் விடுவது அவசியம். இவ்வாறு வாதம் நடந்தது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “உயர் நீதிமன்ற வளாகத்தில் நீதித் துறைக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

அதே நேரம், இந்த துணை மின்நிலையத்தை மாற்றினால் உயர் நீதிமன்றம் மட்டுமின்றி பிற முக்கிய பொது சேவை அமைப்புகளுக்கான மின் விநியோகமும் பாதிக்கப்படும்.

முக்கிய பொது அமைப்புகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதும் உண்மையான பொதுநல நோக்கம்தான்” என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

ஆதாரம் Hindu Tamil Thisai https://www.hindutamil.in/news/tamilnadu/petition-seeking-return-of-land-given-to-the-electricity-board-dismissed

Share Facebook X WhatsApp Telegram