மாநில உரிமைகளில் சமரசம் கூடாது என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வலியுறுத்தினார்.
மதுரை ஓபுளாபடித்துறை அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார்’ 80-ஆம் ஆண்டு விழா திறந்தவெளி மாநாட்டில் பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி. உடன், திமுக முன்னாள் அமைச்சர் பொன். முத்துராமலிங்கம் உள்ளிட்டோர்.
மதுரை ஓபுளாபடித்துறை அருகே திராவிடர் கழகம் சார்பில் ‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார்’- 80 ஆம் ஆண்டு விழா திறந்தவெளி மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த மாநாட்டில் திராவிடக் கழகத் தலைவர் கி. வீரமணி பங்கேற்றுப் பேசியதாவது:
திராவிடர் கழகத்திலிருந்து சென்ற கட்சிகள்தான் இன்றைய திராவிட இயக்கங்களாக உருவெடுத்துள்ளன என்பதை யாராலும் மறுக்க முடியாது. எங்களைப் பொருத்தவரை, தனிப்பட்ட எதிரிகள் என்று யாரும் கிடையாது. கொள்கை ரீதியிலான எதிரிகள் மட்டுமே உள்ளனர். சிலர் பதவிக்காக இடத்தை மாற்றிக் கொள்வார். ஆனால், திராவிடர் கழகத்தைப் பொருத்தவரை, மக்களின் உரிமைகளை எடுத்துக் கூறும் இயக்கமாகவே இன்றளவும் செயல்படுகிறது.
தமிழகத்தில் பெண்ணுரிமை, பெண் விடுதலை, சாமானிய மக்களுக்கு அதிகாரம் என்ற மறுமலர்ச்சி உருவாகக் காரணமாக இருந்தவர் பெரியார். திராவிடர் கழகத்தை, அதன் கொள்கைகளை தற்போது சிலர் புறக்கணிக்கலாம். ஆனால், சாமானிய மக்கள் விழிப்புணர்வு பெற பெரியார் ஆற்றிய பங்களிப்பைப் புறக்கணிக்க முடியாது. அரசியல் பேசுவதற்கு பல கட்சிகள் உள்ளன. மக்களின் உரிமைகளைப் பற்றி பேச திராவிடர் கழகம்தான் உள்ளது.
மத்தியில் உள்ள பாஜக அரசு இந்திய அரசமைப்புச் சட்டத்தை முற்றிலும் நீக்கிவிட்டு, மனுதர்மத்தை நமது நாட்டில் அமல்படுத்த முயற்சித்து வருகிறது. அவர்களின் ஒரே கொள்கை சனாதனத்தைப் பாதுகாப்பது. மக்கள் நலன் மீது அக்கறை இல்லாத அரசாகவே மத்திய பாஜக அரசு திகழ்கிறது.
‘நீட்’ தேர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மாநிலத்தின் உரிமைகளை மத்திய பாஜக அரசு பறித்து வருகிறது. தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் அரசு எந்தக் காரணத்துக்காகவும் மாநில உரிமைகளில் சமரசம் செய்து கொள்ளக் கூடாது என்றார் அவர்.
மாநாட்டில் திமுகவின் உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான பொன். முத்துராமலிங்கம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத் தலைவர் வா. நேரு, திராவிட இயக்க தமிழர் பேரவையின் துணைப் பொதுச் செயலாளர் ராம. வைரமுத்து உள்ளிட்டோர் பேசினார்.
இதில் திராவிடர் கழகத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே. எடிசன்ராஜா, மதுரை மாவட்டத் தலைவர் அ. முருகானந்தம், மாவட்டச் செயலாளர் சுரேஷ், நிர்வாகிகள், தோழமைக் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.