இன்றைய தேதி | AegonEyes இப்போது எங்களைப் பற்றி தொடர்பு தனியுரிமை Newsroom
BREAKING உலகத்தை தமிழில் பாருங்கள் — முக்கிய செய்திகள் உடனுக்குடன்...

மதுக்கடை ஊழியர் மரணம்: நீதித் துறை நடுவரின் விசாரணை அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவு

தூத்துக்குடியில் காவல்துறை விசாரணையின்போது மதுக்கடை ஊழியர் அருணாச்சலம் மரணமடைந்ததாக தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு தொடர்பாக, நீதித் துறை நடுவரின் விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த தீரன் திருமுருகன் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த பொதுநல மனு:

தூத்துக்குடியில் மதுக்கடையில் ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றிய அருணாச்சலத்தை, கடந்த மாதம் 23-ஆம் தேதி சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக காவல் துறையினர் கைது செய்தனர். இந்த நிலையில், விசாரணையின் போது காவல் துறையினர் தாக்கியதில் அருணாச்சலம் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. எனவே, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றவும், உரிய இழப்பீட்டுடன் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கவும் உத்தரவிட வேண்டும் என அவர் கோரினார்.

இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன், ஆர். சக்திவேல் அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த வழக்கில் உயிரிழந்த அருணாச்சலம் எப்போது காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்?, எப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்?, காவல் நிலையத்தில் சிசிடிவி காட்சிகள் பாதுகாக்கப்பட்டுள்ளனவா?, உடல்கூறாய்வு பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் குறித்து நீதிபதிகள் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினர்.

இதையடுத்து, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞர் தெரிவித்ததாவது:

இந்த விவகாரத்தில் விசாரணை முறையாக நடைபெற்று வருகிறது. சிசிடிவி காட்சிகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. மூன்று முதுநிலை மருத்துவர்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட உடல்கூறாய்வு முழுவதுமாக வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. உடல்கூறாய்வில் அவரது உடலில் காயங்கள் எதுவும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. மயக்கம் அடைந்து கீழே விழுந்தபோது தலையில் அடிபட்டதால் அருணாச்சலம் உயிரிழந்தார். இதுதொடர்பாக நீதித் துறை நடுவர் விசாரித்து வருகிறார். அவரது விசாரணை அறிக்கைக்காக காத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதித் துறை நடுவரின் விசாரணை அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனர் நீதிபதிகள்.

ஆதாரம் Dinamani https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2026/Aug/22/death-of-liquor-shop-employee-order-issued-to-submit-judicial-magistrates-inquiry-report

Share Facebook X WhatsApp Telegram