புதுச்சேரி அரசில் ஆறுமுகம் எம்.எல்.ஏ., மீண்டும் அரசு கொறாடாவாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சேர்த்தல்: ஆகஸ்ட் 21, 2026 மாலை 11:34
ஆறுமுகம் எம்.எல்.ஏ., படம் வைக்கவும்
புதுச்சேரி: புதுச்சேரி அரசின் அரசு கொறாடாவாக ஆறுமுகம் எம்.எல்.ஏ., மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்த உடனேயே, முதல்வர் ரங்கசாமி வரும் 24-ஆம் தேதி பட்ஜெட்டைத் தாக்கல் செய்வதற்கான அனைத்து தயாரிப்புப் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்த அலுவல் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக, தற்போது அரசு கொறாடாவாக என்.ஆர்.காங்., எம்.எல்.ஏ., ஆறுமுகம் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆட்சியிலும் அவரே அரசு கொறாடா என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு கொறாடா என்றால் என்ன?: சட்டசபையில் தனது ஆளும் கட்சியின் எம்.எல்.ஏ.,களைக் கட்டுப்படுத்தி, ஒருங்கிணைக்கும் முக்கியப் பொறுப்பிலுள்ள மக்கள் பிரதிநிதி பணியே அரசு கொறாடா ஆகும். சட்டசபை நடவடிக்கைகளில் கட்சி ஒழுங்கைப் பேணவும், அரசின் செயல்பாடுகள் தொய்வின்றி நடக்கவுமே இந்தப் பதவி உருவாக்கப்பட்டுள்ளது. முக்கிய மசோதாக்கள், பட்ஜெட் அல்லது நம்பிக்கையில்லா தீர்மானம் போன்ற வாக்கெடுப்புகளின் போது, எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் தவறாமல் அவைக்கு வர வேண்டும் என்றும், கட்சி எடுக்கும் முடிவின் படியே ஓட்டளிக்க வேண்டும் என்றும் எழுத்துப்பூர்வமான உத்தரவைப் பிறப்பிப்பார்.
கட்சியின் உத்தரவை மீறி செயல்படும் அல்லது ஓட்டெடுப்பில் கட்சிக்கு எதிராக ஓட்டளிக்கும் எம்.எல்.ஏ.,க்களை, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சபாநாயகரிடம் பரிந்துரை செய்வார். சட்டசபையில் முக்கிய விவாதங்கள் நடக்கும்போது ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,க்களின் வருகையை உறுதிசெய்வார். அமைச்சரவையின் முடிவுகளையும், முதல்வர் விருப்பங்களையும் கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்குக் கொண்டு சேர்ப்பதுடன், எம்.எல்.ஏ.,களின் கருத்துக்களைத் தலைமைக்குத் தெரிவிக்கும் பாலமாகச் செயல்படுவார்.
அவைக்குள் ஆளும் கட்சியின் பலத்தை முழுமையாக நிலைநிறுத்துவதும், கட்சியின் கட்டுப்பாட்டை உறுதி செய்வதுமே அரசு கொறாடாவின் முதன்மைப் பணியாகும்.