பயிற்சியில் இந்திய வீரர்கள்: கொழும்பு டெஸ்டில் சாதிக்க
சேர்க்கப்பட்டது: ஆகஸ்ட் 21, 2026 11:28 மாலை
கொழும்பு: கொழும்பு டெஸ்டில் வெற்றி பெற இந்திய வீரர்கள் தயாராக உள்ளனர். பயிற்சியில் துணை கேப்டன் கே. எல். ராகுல் மற்றும் ஸ்பின்னர் குல்தீப் யாதவ் பங்கேற்கவில்லை.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வென்ற இந்தியா, 1-0 என முன்னிலையில் உள்ளது.
சுப்மன் பலவீனம்: இரண்டாவது டெஸ்ட், நாளை கொழும்பில் துவங்குகிறது. இதற்காக இந்திய வீரர்கள் கொளுத்தும் வெயிலில் கொழும்பு ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் வலை பயிற்சியில் ஈடுபட்டனர். கடந்த போட்டியில் இலங்கையின் இடது கை 'ஆப்-ஸ்பின்னர்' பிரபாத் ஜெயசூர்யாவின் பந்துகளில் இரு இன்னிங்சிலும் கேப்டன் சுப்மன் கில் சொற்ப ரன்களில் (16, 8) அவுட்டானார். இவர் பங்கேற்ற 42 டெஸ்ட் போட்டிகளில் 11 முறை இடது கை 'ஆப்-ஸ்பின்னர்'களிடம் வீழ்ந்துள்ளார். இந்த பலவீனத்தை நிவர்த்தி செய்ய, மானவ் சுதார், ரவிந்திர ஜடேஜா, சரண்ஷ் ஜெயின் மற்றும் உள்ளூர் வீரர்களின் சுழற்பந்துவீச்சில் நீண்ட நேரம் பேட்டிங் பயிற்சி மேற்கொண்டார். அவ்வப்போது இமாலய சிக்சர் அடித்து அசத்தினார். தொடர்ந்து ரிஷாப் பன்ட், துருவ் ஜுரல், சர்பராஸ் கான் உள்ளிட்டோர் 'பேட்டிங்' பயிற்சியில் ஈடுபட்டனர். இதை கண்காணித்த, இந்திய அணியின் 'ஸ்பின் பவுலிங்' பயிற்சியாளர் சாய்ராஜ் பஹுதுலே உரிய ஆலோசனை வழங்கினார்.
சிக்கலில் குல்தீப்: பயிற்சியில், துணை கேப்டன் ராகுல் மற்றும் 'ஸ்பின்னர்' குல்தீப் யாதவ் பங்கேற்கவில்லை. முதல் டெஸ்டில் சோபிக்காத குல்தீப்பிற்கு பதிலாக 'ஸ்பின்னர்' சரண்ஷ் ஜெயின் அறிமுக வாய்ப்பு பெறலாம்.
பஹுதுலே கூறுகையில், "கொழும்பு சூழல், ஆடுகளத்தின் தன்மையை அறிந்து கொள்ள சுப்மன் கில் முயற்சித்தார். எத்தகைய 'ஷாட்' அடிக்க வேண்டுமென கற்றுக் கொண்டார். சுழற்பந்துவீச்சை சிறப்பாக சமாளிக்கும் திறன் பெற்றவர். ஆப், லெக் ஸ்பின்னர்களுக்கு எதிராக சிறப்பாக 'பேட்' செய்துள்ளார்.
காலையில் இருந்து கொழும்பு வந்த களைப்பில் சில வீரர்கள் உள்ளனர். இதனால் தான் பயிற்சியில் ராகுல், குல்தீப் யாதவிற்கு 'ரெஸ்ட்' கொடுக்கப்பட்டது. ஒரு போட்டியை வைத்து குல்தீப் திறமையை மதிப்பிட முடியாது. முதல் டெஸ்ட் நடந்த காலை மைதான சூழ்நிலைக்கு ஏற்ப பந்துவீசினார். அணியின் 'மேட்ச் -வின்னராக' திகழ்கிறார். மானவ் சுதார் தொடர்ந்து அருமையாக பந்துவீசுகிறார். ஆடுகளத்தின் தன்மை, எதிரணி பேட்டர்களின் மனநிலையை புரிந்து கொண்டு செயல்படுகிறார்.
சரண்ஷ் ஜெயின் வாய்ப்பு பற்றி விவாதிக்கப்படும். கொழும்பு போட்டிக்கான ஆடுகளத்தை ஆய்வு செய்த பின் இந்திய 'லெவன்' முடிவு செய்யப்படும்" என்றார்.