இன்றைய தேதி | AegonEyes இப்போது எங்களைப் பற்றி தொடர்பு தனியுரிமை Newsroom
BREAKING உலகத்தை தமிழில் பாருங்கள் — முக்கிய செய்திகள் உடனுக்குடன்...

த.வெ.க. அரசு வழங்கும் கார் மற்றும் சலுகைகள்... 'எங்களுக்கு வேண்டாம்!' — தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் செலவு குறித்து கேள்வி எழுப்புகின்றனர்

த.வெ.க. அரசு வழங்கும் கார் மற்றும் சலுகைகள்... 'எங்களுக்கு வேண்டாம்!' — தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் செலவு குறித்து கேள்வி எழுப்புகின்றனர்

சென்னை: 'த.வெ.க. அரசு கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதாக முதல்வர் விஜய் கூறி வருவதால், அரசு வழங்கும் கார் மற்றும் சலுகைகள் எங்களுக்கு வேண்டாம். கஜானா காலி என சொல்லிவிட்டு, எதற்காக செலவு என்பதால், தி.மு.க.வைச் சேர்ந்த 59 எம்.எல்.ஏ.க்களும் அரசு தரும் கார்களை வாங்கப் போவதில்லை' என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தெரிவித்தார்.

சட்டசபையில் நடந்த விவாதம்:

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி: எம்.எல்.ஏ.க்களுக்கு புதிய வாகனம் வழங்குவதாக முடிவெடுத்து, முதல்வர் அறிவித்துள்ளார். இந்த அரசு பொறுப்பேற்ற நாள் முதல், கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதாக முதல்வர் கூறி வருவதால், தி.மு.க.வைச் சேர்ந்த 59 எம்.எல்.ஏ.க்கள் அரசு வழங்கும் கார்களைப் பெறுவதில்லை என, எங்கள் தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி முடிவெடுத்துள்ளோம். அரசுக்கு ஏற்படும் தேவையற்ற செலவுகளைக் குறைக்கும் வகையில், எம்.எல்.ஏ.க்கள் தங்களது வேட்புமனுவில் தெரிவித்தபடி, பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கு மட்டுமே வாகனங்களை வழங்க வேண்டும்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: அனைத்து எம்.எல்.ஏ.க்களும் சமம் என நினைத்து, முதல்வர் கார் வழங்குவதாக அறிவித்தார். எனவே, கார் இருக்கும் மற்றவர்கள் யாரும் அதைக் கேட்கப் போவது கிடையாது. இதுதான் எங்கள் நிலைப்பாடு. அரசு காரில் செல்வதால், அதிகாரிகளிடம் மரியாதை கிடைக்கும் என எம்.எல்.ஏ.க்கள் நினைக்கின்றனர். எதிர்க்கட்சித் தலைவருக்கு இரண்டு, மூன்று வீடுகள் உள்ளன. ஆனால், அவர் அரசு பங்களாவில் இருக்கிறார். அவருக்கு வீடு இருப்பதால் தர முடியாது என்று சொல்ல முடியாது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. மாரிமுத்துவிடம் கார் இல்லை. இந்தக் கட்சி; அந்தக் கட்சி என தனியாக அறிவிப்பு வராது; பொதுவாகத்தான் முதல்வர் அறிவிக்க முடியும்.

தி.மு.க. – கே.என்.நேரு: எதிர்க்கட்சித் தலைவர் என்பவர், அமைச்சர் அந்தஸ்தில் இருப்பதால், அது அவரது உரிமை; அரசாங்கம் தருகிறது. தன் பணியைக் கவனிப்பதற்காக வீட்டைக் கேட்டு வாங்கியுள்ளார். அரசுக்கு செலவு ஏற்படுகிறது என்பதால், நாங்கள் கார் வேண்டாம் என்று சொல்கிறோம். தேர்தலின் போது, சொத்து விபரத்தில் இருப்பதைத்தான் குறிப்பிட்டுள்ளோம். உண்மையைத்தான் சொல்கிறோம்; முடிந்தால் வழக்கு போடுங்கள். எதற்கெடுத்தாலும் குதர்க்கமாகப் பேசினால், எப்படி சரியாக இருக்கும். அமைச்சர் ஆதவ் சொந்த வீட்டில் வசிக்கிறார். அவருக்கு அரசு தான் வாடகை கொடுக்கிறது; அதை வேண்டாம் என்று எழுதிக் கொடுங்கள். எதிர்க்கட்சித் தலைவர் சொல்லக்கூடிய வார்த்தைகள், அரசியல் ரீதியாக உள்ளன. அரசின் நிதிச்சுமை எங்களுக்குத் தெரியாதது போலவும், வசதி வாய்ப்புக்காகவும், ஆடம்பரத்திற்காகவும் கார் வழங்குவது போலவும் அவரது கருத்து உள்ளது. தேர்தல் நேரத்தில் 10,000 ரூபாய் இருப்பதாகக் கூறிவிட்டு, 'ரேஞ்ச் ரோவர்' காரில் செல்பவர்கள் நாங்கள் கிடையாது.

இந்திய கம்யூ., – ராமச்சந்திரன்: இல்லாதவர்களுக்கு கார் கொடுங்கள். கார் தேவையில்லை என்பதுதான் எங்களின் நிலைப்பாடு.

* பா.ம.க. – கணேஷ்குமார்: பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கார் வழங்கலாம் என்பது எங்கள் நிலைப்பாடு.

* உதயநிதி: இந்த அரசு பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்தே, அரசு கஜானாவை துடைத்து வைத்துச் சென்றுள்ளனர் என, முதல்வர் கூறி வந்தார். மக்களுக்கு இலவசங்கள் கொடுப்பதாக, தேர்தல் பிரசாரத்தில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் குற்றஞ்சாட்டினர். இப்போது இலவசமாக கார் தருகிறீர்கள். அந்த கார் எங்களுக்கு தேவையில்லை. யாருக்கு வேண்டுமானாலும் நீங்கள் வழங்குங்கள். தேர்தல் பத்திரத்தில், கார் இல்லை என்று கூறியவர்களுக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கும் வழங்க வேண்டும் என்பதுதான் எங்களது ஆலோசனை.

* அமைச்சர் ஷாஜகான்: கருணாநிதி முதல்வராக இருந்த போது, 300க்கும் மேற்பட்ட ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கு கார்கள் வழங்கப்பட்டன. அப்போது கேள்வி கேட்காதவர்கள், இப்போது எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்குவதைத் தடுக்கின்றனர்.

* தி.மு.க. – எ.வி.வேலு: அரசு கடன் சுமையில் உள்ளது. விவசாயிகளுக்கு முழுமையாக பயிர் கடன் தள்ளுபடி செய்யவில்லை என்பதால், தி.மு.க. – எம்.எல்.ஏ.க்கள், 59 பேருக்கு கார் வேண்டாம் என்று எதிர்க்கட்சி தலைவர் கூறியுள்ளார். நீங்களும் வாங்க வேண்டாம் என சொல்லவில்லை. அதைப் புரிந்து கொள்ளாமல், அரசியல் செய்வதாகக் கூறுகின்றனர். எதிர்க்கட்சி தலைவருக்கு வீடு வழங்குவது மரபு. நீங்களும் நானும் அதை முடிவு செய்ய முடியாது.

* தி.மு.க. – கே.என்.நேரு: எம்.எல்.ஏ.க்களுக்கு, 'செக் பவர்' இல்லை. ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கு கையெழுத்திடும் அதிகாரம் உண்டு. மக்களை நேரடியாக சந்திப்பதற்கு அவர்களுக்கு வாகனம் வழங்கப்பட்டது.

* அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: ஒரு தொகுதியில் மூன்று லட்சம் பேர் உள்ளனர். அவர்களை நடந்து சென்று சந்திக்க முடியாது. மக்களை சந்திக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான், எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்குவதாக, முதல்வர் அறிவித்துள்ளார். காரில், அனைத்து துறை அலுவலகங்களுக்கும் நேரில் சென்று கேள்வி கேட்டால், அதிகாரிகளுக்கு பயம் வரும். த.வெ.க.வில் கார் இருப்பவர்கள், அதற்காக விண்ணப்பிக்க போவது கிடையாது.

ஆதாரம் Dinamalar https://www.dinamalar.com/news/tamil-nadu-news/-government-car-and-perks-we-dont-want-whats-the-cost-----/4301728

Share Facebook X WhatsApp Telegram