இன்றைய தேதி | AegonEyes இப்போது எங்களைப் பற்றி தொடர்பு தனியுரிமை Newsroom
BREAKING உலகத்தை தமிழில் பாருங்கள் — முக்கிய செய்திகள் உடனுக்குடன்...

சவுகார் ஜானகி: தவிர்க்க முடியாத நடிப்புக் கலைஞர்!

சவுகார் ஜானகியின் மறைவுக்கு அரசியல் மற்றும் திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திரைத்துறையில் 70 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணித்து, எண்ணற்ற கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டிய சவுகார் ஜானகியின் கலைப்பணி என்றும் போற்றத்தக்கது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல்வேறு மொழிப் படங்களில் நடித்து சாதனை படைத்துள்ளதோடு, பத்ம விருது, கலைமாமணி விருது, நந்தி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள அவருடைய மறைவு திரையுலகத்துக்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது ஆன்மா இறைவன் திருவடிகளில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: தமிழில் அறிமுகமான ‘வளையாபதி’ திரைப்படத்தில் பாரதிதாசனின் வரிகளைச் சிறப்பாக உச்சரித்து, கலைஞரின் கவனத்தை ஈர்த்தவர் சவுகார் ஜானகி. அவரது நீண்ட திரைப்பயணத்தில் சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர், ஜெமினி கணேசன் உள்ளிட்ட பல பெரும் நட்சத்திரங்களுடன் நடித்திருக்கிறார்.

அண்ணா, என்.டி.ஆர். எனப் பல முதலமைச்சர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றிருக்கிறார். அவர் நடித்த வெற்றிப்படங்களின் மூலமாக தென்னிந்திய மக்களின் மனதில் அவர் என்றும் புகழோடு வாழ்வார். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும், திரைத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

காங். தலைவர் மாணிக்கம் தாகூர்: 1950-களில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து தனக்கென தனியிடத்தை பிடித்தவர் சவுகார் ஜானகி. சிவாஜிகணேசன், எம்.ஜி.ஆர். ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் நடித்துள்ளார். கலைத்துறையில் ஆற்றிய பங்களிப்புக்காக பத்ம விருதும் பெற்றுள்ளார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கலையுலக நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கமல்ஹாசன்: ‘பார்த்தால் பசி தீரும்’ படம் தொடங்கி நாற்பதாண்டு காலப்பரப்பில் பல படங்கள் இணைந்து பணியாற்றியுள்ளோம். அவர் அம்மா, நான் பிள்ளை. தென்னிந்தியத் திரையின் தவிர்க்கவியலாத நடிப்புக் கலைஞர் சவுகார் ஜானகி. அன்றைய கதாநாயகர்கள் அத்தனை பேரோடும் நடித்தவர். என் ஆசிரியர் கே.பாலசந்தரின் விருப்பத் தேர்வாக இருந்தவர். மறைந்துவிட்டார். அன்னை பிம்பம் ஒன்று விடைபெற்றது. கண்ணீரோடு வழியனுப்புகிறேன்.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா: திரையுலகில் தனித்துவமான நடிப்பாற்றலாலும் கலைத்திறமையாலும் பல தலைமுறை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சவுகார் ஜானகி. தமிழ் திரையுலகுக்கு பெருமை சேரத்த அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவருடைய ஆன்மா சாந்தியடையவும் அவரை இழந்து வாடும் திரையுலகினருக்கும் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

நடிகர் சங்கத் தலைவர் நாசர்: திரையில் சிலரது நடிப்பு காண்போரை நெகிழ வைக்கும். சிலரது நடிப்பு காலத்தையே உறைய வைக்கும். சவுகார் ஜானகி 2-வது வகையைச் சேர்ந்தவர். இன்று ஒரு நடிகையை மட்டும் நாம் இழக்கவில்லை.

திரையுலகில் பேரன்பு கொண்ட ஒரு தாய்மையின் வடிவத்தை, ஒரு சகாப்தத்தை, உயிரோட்டமுள்ள நடமாடும் வரலாற்றை இழந்திருக்கிறோம். அவர் உச்சரித்த ஒவ்வொரு வசனத்திலும் ஜீவனும், அவரது ஒவ்வொரு பாவனையில் ஒரு கதையும், அவர் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் மனித வாழ்க்கையின் மகத்துவம் பிரதிபலித்தது.

பன்மொழிப் புலமை கொண்ட அவரது பேரன்பு பொங்கும் குரலை இனி நேரில் கேட்க முடியாது, கனிவே உருவான அந்த முகத்தை புதிய கதாபாத்திரத்தில் இனி காண முடியாது என்னும் உண்மையை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது. திரையுலகிற்கு மட்டுமல்ல, அறிவார்ந்த சமுதாயத்திற்கும் இது ஒரு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.

ஆனால், சவுகார் ஜானகி போன்ற கலைஞர்கள் மறைவதில்லை. அவர்கள்தம் கலையால் இவ்வுலகிலும், நம் உள்ளங்களிலும் அழிவற்ற தங்கள் ஆழமான தடத்தை தங்களைப் பதித்துவிட்டுச் செல்கிறார்கள். காலம் மாறலாம். தலைமுறைகள் மாறலாம். ஆனால் சவுகார் ஜானகி என்ற பெயர் தமிழ்த் திரையுலகின் வரலாற்றில் என்றும் அழியாது காலம் உள்ளவரை நிலைத்திருக்கும்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஆதாரம் Hindu Tamil Thisai https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/an-indispensable-actor-film-fraternity-mourn-sowcar-janaki

Share Facebook X WhatsApp Telegram