காரில் கடத்திய ரூ.9 கோடி பணம்; கர்நாடக எல்லையில் பறிமுதல்
சேர்க்கப்பட்டது: ஆகஸ்ட் 21, 2026 மாலை 11:29
ஓசூர்: காரில் கடத்தி வரப்பட்ட ஒன்பது கோடி ரூபாயை, கர்நாடக மாநில எல்லையில் போலீசார் பறிமுதல் செய்து, வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பகுதியில் உள்ள தனியார் ஜுவல்லரி உரிமையாளர் சச்சின் என்பவரது வீட்டில், ஆகஸ்ட் 18-ஆம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 1.30 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், அந்த ஜுவல்லரி உரிமையாளருக்குச் சொந்தமான ஒன்பது கோடி ரூபாயை, கேரள மாநில பதிவு எண் கொண்ட 'ஹூண்டாய் கிரிட்டா' காரில் சட்டவிரோதமாகக் கொண்டு செல்வதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.
அந்த கார் தமிழக எல்லையைக் கடந்து கர்நாடக மாநிலத்தை நோக்கி சென்றதை அறிந்த அதிகாரிகள், பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி போலீசாருக்குத் தகவல் அனுப்பினர். ஆகஸ்ட் 18-ஆம் தேதி இரவு, வீர சந்திரா சிக்னல் அருகே அந்த காரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
காரிலிருந்து ஒன்பது கோடி ரூபாயை பறிமுதல் செய்து, உரிய ஆவணங்கள் இன்றி பணத்தைக் கொண்டு சென்றதாக இருவரை பிடித்து, வருமான வரித்துறை அதிகாரிகளிடம் பணத்துடன் ஒப்படைத்தனர். அவர்களின் பெயர்களை போலீசார் வெளியிடவில்லை.
பிடிபட்டவர்களிடம் வருமான வரித்துறையினர் நடத்திய விசாரணையில், அப்பணம் விளாத்திகுளம் ஜுவல்லரி உரிமையாளருக்குச் சொந்தமானது என தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.