இன்றைய தேதி | AegonEyes இப்போது எங்களைப் பற்றி தொடர்பு தனியுரிமை Newsroom
BREAKING உலகத்தை தமிழில் பாருங்கள் — முக்கிய செய்திகள் உடனுக்குடன்...

உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மென்பொறியாளர் கைது

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளைக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்களை விடுத்த மென்பொறியாளரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

தமிழகம் உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள விமானங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், சென்னை உயர்நீதிமன்றம், அதன் மதுரை கிளை, பிற மாநில உயர்நீதிமன்றங்கள் உள்ளிட்ட பல இடங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்ந்து அனுப்பப்பட்டன. இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டதையடுத்து, மத்திய மற்றும் மாநில உளவுத்துறை அமைப்புகள், குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் போது, அமெரிக்காவில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய ஒரு மென்பொறியாளர் இந்த மிரட்டல்களை விடுத்தது தெரியவந்தது. தொடர் விசாரணையில், அந்த நபர் தமிழகத்தின் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த 37 வயது சரத் சுப்பிரமணியன் சங்கர் என்பதும், கடந்த இரண்டு ஆண்டுகளாக மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்களை அனுப்பி வந்ததும் தெரியவந்தது. சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்த சரத் சுப்பிரமணியன் சங்கரை, தமிழக பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்தனர். பின்னர், மதுரை இணையவழி குற்றப்பிரிவு போலீஸார் அவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

போலீஸார் மேலும் தெரிவித்ததாவது: கைது செய்யப்பட்ட சரத் சுப்பிரமணியன் சங்கரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நாடு முழுவதும் 1500-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு அவர் வெடிகுண்டு மிரட்டல்களை அனுப்பியது தெரியவந்துள்ளது. குறிப்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளைக்கு மிரட்டல் அனுப்பியது தொடர்பாக அவர் மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது அவரிடம் விசாரணை முடிந்துவிட்டது; அவரை தமிழக பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளோம். ஆந்திரப் பிரதேசம், பஞ்சாப், சத்தீஸ்கர் உள்ளிட்ட பல மாநிலங்களில் அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன; அந்தந்த மாநில காவல் துறையினரும் அவரிடம் விசாரணை நடத்த உள்ளனர் என்றனர்.

ஆதாரம் Dinamani https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2026/Aug/22/software-engineer-arrested-for-making-a-bomb-threat-to-the-madurai-bench-of-the-high-court

Share Facebook X WhatsApp Telegram