சென்னை: தமிழக சட்டப்பேரவையில் மின்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி அமைச்சர் நிர்மல் குமாரை விமர்சித்ததால், அதற்கு நிர்மல் குமார் பதிலளித்து உதயநிதியையும் விமர்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இவ்விவாதத்தில், திமுக எம்எல்ஏ வி. செந்தில்பாலாஜி பேசியதாவது: 2021-ஆம் ஆண்டில் தமிழகத்தின் மின் நிறுவுதிறன் 32,595 மெகாவாட் ஆக இருந்தது; இது தற்போது 46,846 மெகாவாட் ஆக உயர்ந்துள்ளது. இந்த மின் தேவை உயர்வுக்கு ஏற்றவாறு கட்டமைப்புகளை உருவாக்கி, அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றியவர் அப்போதைய முதல்வர் ஸ்டாலின் என்றார்.
லட்சக்கணக்கான மின் நுகர்வோர், தங்கள் மின் கட்டணம் உயர்ந்துள்ளதாகப் புகார் தெரிவித்துள்ளனர். மின்வாரியத்தின் தலைவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 3.70 லட்சம் மின் நுகர்வோருக்கு மின் கட்டணம் மறு ஆய்வு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அமைச்சர் ஒரு கருத்தும், நிர்வாகம் ஒரு கருத்துமாக வெளியிடுகின்றனர். எனவே, அமைச்சரும் நிர்வாகமும் ஒன்று சேர்ந்து, மின் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்றார்.
மின்வாரியத்தில் 18 ஹார்ட் டிஸ்குகள் காணாமல் போயின. அவற்றில் முக்கிய ஆவணங்கள் அனைத்தும் இருந்தன என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்திருந்தார். ஆனால், அவர் பின்னர் 38 ஹார்ட் டிஸ்குகளை பறிமுதல் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அதற்கு அமைச்சர் சிடிஆர். நிர்மல் குமார் அளித்த பதில்: மின்வாரியம் தாமாக முன்வந்து, முந்தைய ஆண்டு கட்டணத்தை விட பல மடங்கு உயர்ந்த சுமார் 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறுமதிப்பீடு செய்ய முடிவு செய்து, பணிகளை மேற்கொண்டு வருகிறது. இவை புகாராக வந்து ஆய்வு செய்யப்படவில்லை.
மற்ற மின் நுகர்வோர் விவரங்களை ஆய்வு செய்தபோது, மின் பயன்பாடு மதிப்பீடு செய்பவர்கள் களத்துக்குச் செல்லாமல், மேசையிலேயே உட்கார்ந்தபடி, முந்தைய மின் பயன்பாட்டு அளவை அப்படியே கணக்கிட்டு பதிவு செய்துள்ளது தெரியவந்தது. புதிய ஆட்சி வந்த பிறகு, முறையாக கணக்கெடுக்க அறிவுறுத்தப்பட்டது. இதன் மூலம் நான்கு மாத கணக்கெடுப்பு முறையாக செய்யப்பட்டதால், கட்டணம் அதிகமாக வந்துள்ளது. வருங்காலத்தில் ப்ளூடூத் வழியாக கணக்கீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி, பல இடங்களில் மின் தட்டுப்பாடு இருப்பதாகவும், அதற்கான தளவாடங்கள் இல்லை என்றும் கூறினார். மின்வாரியத்தின் கடந்த 5 ஆண்டு கால நிலையை ஒரு நிமிடத்தில் சொல்ல முடியாது என்றார். இதனைத் தொடர்ந்து, அமைச்சர் நிர்மல் குமார், செந்தில் பாலாஜியை அடைமொழியில் குறிப்பிட்டு, பின்னர் அதை திரும்பப் பெறுவதாக அறிவித்தார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் எழுந்து நின்று கோஷமிட்டனர். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி எழுந்து, "சங்கி அமைச்சர், மன்னிக்கவும், மின்துறை அமைச்சர் பேசியதை அவைக் குறிப்பிலிருந்து நீக்கி விட்டீர்களா?" என பேரவைத் தலைவரிடம் கேட்டார்.
உடனே அமைச்சர் நிர்மல் குமார், "பாத்ரூமில் 3 மணி நேரம் உட்கார்ந்து இருந்த எதிர்க்கட்சித் தலைவர் என்று நான் சொல்வதற்கு எவ்வளவு நேரம் ஆகும்?" என்றார். இதனைத் தொடர்ந்து, தவெக மற்றும் திமுக எம்எல்ஏக்கள் இருதரப்பினரும் எழுந்து, அவையில் கோஷமிட்டு அமளியில் ஈடுபட்டனர்.
பின்னர், பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர், நிர்மல் குமார் ஏற்கெனவே செந்தில் பாலாஜி குறித்துக் குறிப்பிட்ட அடைமொழி வார்த்தையை நீக்கி விட்டதாக அறிவித்தார். தொடர்ந்து உதயநிதி பேசும்போது, "யார் யார் பாத்ரூமில் எவ்வளவு நேரம் உட்கார்ந்து இருக்கிறார்கள் என்று கண்காணிப்பதற்கு தனி அமைச்சர் வைத்திருக்கிறீர்களா?" என்று கேட்டார்.
உடனே, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதில் அளிக்க எழுந்தபோது, திமுக எம்எல்ஏக்களும் எழுந்து, ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
பின்னர் பேசிய ஆதவ் அர்ஜுனா, "இது மானிய கோரிக்கை மீதான விவாதம் என்பது அனைவருக்கும் தெரியும். இதுபோன்று திமுகவினர் எல்லோரும் எழுந்தால், பின்னர் நாங்களும் எழுந்தால், இந்த அவையே நடக்காது. முதலில் அவர்களை அமரச் சொல்லுங்கள்" என்றார்.
பின்னர் பேசிய உதயநிதி, "எங்கள் முன்னாள் அமைச்சர் மானிய கோரிக்கையில் புள்ளி விவரங்களுடன் தெளிவாகப் பேசிக் கொண்டிருந்தார். தவறான வார்த்தையை முதலில் யார் கூறியது என்பது உங்களுக்குத் தெரியும். அதையெல்லாம் அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டியது உங்கள் பொறுப்பு" என்றார். பின்னர் பேரவைத் தலைவர் அனைவரையும் அமைதியாக அமரவைத்து, விவாதத்தைத் தொடரச் செய்தார். இந்நிகழ்வில், தவெக மற்றும் திமுக எம்எல்ஏக்கள் அவையில் எழுப்பிய கோஷத்தால் பரபரப்பு ஏற்பட்டது.