புலி தாக்கி இரண்டாவது நபர் பலி; கூடலூரில் மக்கள் மறியல்
சேர்க்கப்பட்டது: ஆகஸ்ட் 21, 2026 11:28 மு.ப.
கூடலூர்: ஓவேலி பகுதியில், புலி தாக்கி இறந்தவரின் உடலை சாலையில் வைத்து, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம், கூடலூர், ஓவேலி லாரஸ்டன் பகுதியில் கடந்த 9-ஆம் தேதி, தனியார் காபி தோட்டத்தில் 60 வயதுடைய பாலகிருஷ்ணன் என்பவரை புலி தாக்கி கொன்றது. அப்பகுதியில் தானியங்கி கேமராக்கள் பொருத்தி, புலியை கண்காணிக்கும் பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், அதே பகுதியில் நேற்று மதியம் 1:00 மணிக்கு 56 வயதுடைய ரவிச்சந்திரன் என்பவரை புலி தாக்கி கொன்றது. அப்பகுதியில் இருந்த அவரின் உடலை மீட்ட மக்கள், வனத்துறையினர் அதை எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை. போலீசார் வந்து உடலை ஆய்வு செய்தனர்.
அதன்பின், பொதுமக்கள் உடலை எடுத்து வந்து, லாரஸ்டன் பகுதி சாலையில் வைத்து, 'ஆட்கொல்லி புலியை பிடிக்கும் வரை, உடலை எடுத்து செல்ல அனுமதிக்க மாட்டோம்' என கோஷமிட்டு, மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களுடன், கூடலூர் ஆர்.டி.ஓ. குணசேகரன், டி.எஸ்.பி. கோபாலகிருஷ்ணன் ஆகிய அதிகாரிகள் பேச்சு நடத்தினர். ஏழு மணி நேர பேச்சுவார்த்தையில், 'புலியை பிடிக்க உடனே நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான பணிகள் தொடங்கப்படும்' என அதிகாரிகள் உறுதி அளித்தனர். வலுக்கட்டாயமாக உடலை எடுத்துச் செல்ல முயன்ற போலீசாருக்கும், மக்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வனத்துறை உயர் அதிகாரிகளிடம் இருந்து, புலியை பிடிக்க உத்தரவு கிடைத்ததைத் தொடர்ந்து, மூன்று கூண்டுகள் கொண்டு வரப்பட்டன.