தமிழ்நாடு மற்றும் கேரளாவுக்கு இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் (INCOIS) சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையின்படி, கேரளா, தென் தமிழ்நாடு மற்றும் லட்சத்தீவு கடலோரப் பகுதிகளில் மீனவர்கள் கடலுக்குச் செல்லக் கூடாது; கடலோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை தமிழ்நாடு மற்றும் கேரளப் பகுதிகளில் 'கள்ளக்கடல்' (Swell surge) என அழைக்கப்படும் நிகழ்வை முன்னிட்டு விடுக்கப்பட்டுள்ளது. இது இந்தியப் பெருங்கடலின் தென் பகுதியில் — அதாவது, அண்டார்டிகா அல்லது ஆப்பிரிக்காவின் தெற்கு முனைக்கு அருகில் — ஏற்படும் கடும் புயலால் உருவாகும் பிரம்மாண்ட அலைகளைக் குறிக்கிறது.
இந்தப் பிரம்மாண்ட அலைகள் தொடர்ந்து வடக்கு நோக்கிப் பயணிக்கும்போது, நடுவில் எந்த நிலப் பகுதியும் இல்லாத சூழலில், சுமார் 3,000 முதல் 5,000 கிலோமீட்டர் தூரம் பயணித்து, தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய பகுதிகளில் அதே ஆற்றலோடு மோதுகின்றன.
இந்தப் பிரம்மாண்ட அலைகள் கரையை நெருங்கும்போது, எந்தவித புயல் அறிகுறிகளோ, பலத்த காற்றோ, மழை எச்சரிக்கையோ இல்லாமல் கடல் அமைதியாகவே காட்சியளிக்கும். ஆனால், திடீரென பல மீட்டர் உயரம் கொண்ட பிரமாண்ட அலைகள் எந்தவித முன்னறிகுறி இல்லாமல் கரைப்பகுதிக்குள் நுழைந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தும்.
நிலநடுக்கத்தால் உருவாகும் சுனாமி அலைகள் சுமார் 10 மீட்டர் உயரம்வரை வரும் நிலையில், இந்த கள்ளக்கடல் அலைகள் 5 மீட்டர் உயரம் வரை வந்து கடலோரப் பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற அலைகளைக் கண்காணிக்க INCOIS அமைப்பு இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் மிதவைச் சாதனங்களை அமைத்துள்ளது.
அந்த மிதவைச் சாதனங்கள் இந்தக் கள்ளக்கடல் பேரலைகள் வந்துகொண்டிருக்கிறது என்பது குறித்த விவரங்களை INCOIS அமைப்புக்கு அனுப்பியுள்ளன. அதன் அடிப்படையிலேயே கடலோர மக்களுக்கு இந்த சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக தென்னிந்தியப் பகுதிகளில் ஏப்ரல் முதல் மே மாதங்களில் இந்த நிகழ்வுகள் அதிகளவில் நடக்கும். ஆனால், இந்த முறை ஆகஸ்ட் மாதத்தில் இந்த நிகழ்வு நடந்துள்ளது குறிப்பிடத்தக்க மாற்றமாக பார்க்கப்பட்டுள்ளது. இந்த கள்ள அலைகள் கடலில் மீனவர்களின் படகுகளைக் கவிழ்ப்பது, நில பகுதிக்குள் நுழைந்து படகுகள், கடலோர வீடுகளைச் சேதப்படுத்துவது போன்ற விளைவுகள் ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.