டில்லி ரயிலில் சூட்கேசில் இருந்தது செங்கல்பட்டு பெண்ணின் உடலா? விசாரணையில் விலகாத மர்மம்
சேர்க்கப்பட்டது: ஆகஸ்ட் 21, 2026 11:34 மாலை
சென்னை: சென்னையில் இருந்து டில்லி சென்ற ரயிலில், சூட்கேசில் இருந்த தலை மற்றும் கையில்லா உடல், செங்கல்பட்டு மாவட்டத்தில் தங்கியிருந்த பெண்ணின் உடலா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னையில் இருந்து கடந்த 3ம் தேதி டில்லி புறப்பட்ட ‘தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்’ ரயில், 5ம் தேதி உத்தரபிரதேச மாநிலத்தின் ஆக்ராவை அடைந்தது. அப்போது, ரயிலில் முன்பதிவில்லாத பெட்டியில் இருந்த சிவப்பு நிற சூட்கேசில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாக, ஆக்ரா ரயில்வே போலீசாரிடம் பயணிகள் தெரிவித்தனர்.
போலீசார் சூட்கேசைத் திறந்து பார்த்தபோது, சென்னையில் உள்ள பிரபல ஜவுளிக் கடையின் பைகளில் சுற்றப்பட்ட நிலையில், தலை மற்றும் கைகள் வெட்டி எடுக்கப்பட்ட பெண்ணின் உடல், அழுகிய நிலையில் இருந்தது.
ஆக்ரா ரயில்வே போலீசார், சென்னை ரயில்வே போலீசாரின் உதவியுடன், 350க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்தனர். அப்போது, கண்ணாடி அணிந்த இளம்பெண்ணும், குறுந்தாடி வைத்த வாலிபரும், சென்ட்ரல் ரயில்நிலையம் வந்தடைந்த டில்லி ரயிலில் சிவப்பு நிற சூட்கேசை வைத்துச் செல்வது பதிவாகி இருந்தது.
தொடர் விசாரணையில், செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த மசூதி தெருவில் உள்ள வீட்டில் இருந்து சூட்கேஸ் கொண்டு வரப்பட்டதும் தெரிந்தது. ஆக்ரா ரயில்வே போலீசார், அந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.
அங்கு பிரியாணி செய்யும் பெரிய பாத்திரத்தில், மனித ரத்தம் மற்றும் மனித உடலின் சில பாகங்கள் அழுகிய நிலையில் இருந்தது. அவற்றை ஆய்விற்கு அனுப்பினர்.
இந்நிலையில், தாய் காணாமல் போனதாக, யூசுப்கான் என்பவர், நேற்று மதியம் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
ஒடிஷாவைச் சேர்ந்தவர் ஹயத்துன் நிஷா, 38. இவர் கணவர் ஜஹூர் கானை பிரிந்து, 10 ஆண்டுகளாக மகன் யூசுப்கான், 19, என்பவருடன், கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கம், பள்ளி தெருவில் வசித்து வந்துள்ளார். ஹயத்துன் நிஷா, தாம்பரம் மெப்ஸில் பணிபுரிந்து வந்தார்.
உடன் பணிபுரியும் ராகுலுடன் பழக்கம் ஏற்பட்டு, ஹயத்துன் நிஷா அவரை திருமணம் செய்துள்ளார்.
இதுகுறித்து, கடந்த ஜூன் மாதம், மகன் யூசுப்கானிடம் தெரிவித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த யூசுப்கான், தாயை பிரிந்து பெருங்களத்தூரில் தனியாக அறை எடுத்து தங்கியுள்ளார்.
இதையடுத்து, தாய் ஹயத்துன் நிஷா, ஜூன் 20-ல், கூடுவாஞ்சேரி மசூதி தெருவில், மாடி வீட்டிற்கு வாடகைக்கு வந்துள்ளார். அக்கம் பக்கத்தினரிடம் நன்கு பழகி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 3ம் தேதி காலை 40 வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் பெண், ஹயத்துன் நிஷாவை பார்க்க, கூடுவாஞ்சேரி வீட்டிற்கு வந்துள்ளனர். அண்டை வீட்டார் கேட்டபோது, “என் அண்ணனும், அண்ணியும் தன்னை பார்க்க வந்துள்ளதாக” ஹயத்துன் நிஷா கூறியுள்ளார்.
அன்றைய தினம் இரவு 8:30 மணியளவில், ஹயத்துன் நிஷாவின் வீட்டிற்கு வந்த ஆணும், பெண்ணும், ஒரு சிவப்பு நிற சூட்கேசை, கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்திற்கு இழுத்துச் சென்று, புறநகர் ரயிலில் சென்னை சென்ட்ரல் சென்றுள்ளனர்.
அங்கிருந்து இரவு 10:30 மணி அளவில், தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் அந்த சூட்கேசை வைத்துள்ளனர். தொடர்ந்து ஓர் உணவகத்தில் சாப்பிட்டு விட்டு தலைமறைவானது தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட பெண்ணின் தலை மற்றும் கைகள் இன்னும் கிடைக்கவில்லை. கொலை செய்த இருவரும் யார் என விசாரித்து வருகிறோம்.