இன்றைய தேதி | AegonEyes இப்போது எங்களைப் பற்றி தொடர்பு தனியுரிமை Newsroom
BREAKING உலகத்தை தமிழில் பாருங்கள் — முக்கிய செய்திகள் உடனுக்குடன்...

இருதரப்பு பகையைத் தீர்க்கும் இடமல்ல நீதிமன்றம்: உச்ச நீதிமன்றம்

இருதரப்பினருக்கு இடையேயான பகையைத் தீர்க்கும் இடமல்ல நீதிமன்றம் என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ஒரு பெண், 2013-ஆம் ஆண்டில் தனது சகோதரருடன் ஏற்பட்ட வாக்குவாதம் குறித்து புகார் தெரிவிக்க மும்பை மலாட் காவல் நிலையத்திற்குச் சென்றார். அப்போது அங்கிருந்த மூத்த அதிகாரி ஒருவர் அப்பெண்ணுடன் முதலில் நட்பாகப் பழகியுள்ளார். பின்னர் உதவுவது போல நடித்து, அவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஒரு வழக்குரைஞரைச் சந்தித்துப் புகார் தெரிவித்தபோது, அவரிடம் இந்த விவகாரம் தொடர்பாக அப்பெண் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த ரகசியத் தகவலைப் பகிர்ந்ததாகவும், ஆனால் அந்த ரகசியத்தைக் காக்காமல் ஊடகங்களிடம் அவர் வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, அந்த வழக்குரைஞருக்கு எதிராக இந்திய பார் கவுன்சிலில் அப்பெண் புகார் அளித்தார். அப்புகார் மீது விசாரணை நடத்திய பின், வழக்குரைஞருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு வாதாட பார் கவுன்சில் தடை விதிக்கப்பட்டது. மேலும், அவருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு, அதில் ரூ.3 லட்சத்தை அப்பெண்ணுக்கும், ரூ.2 லட்சத்தை பார் கவுன்சிலிடமும் அளிக்க வேண்டும் என ஆணையிடப்பட்டது. இதற்கு எதிராக, மும்பை உயர் நீதிமன்றத்திலும், பின்னர் உச்ச நீதிமன்றத்திலும் இருதரப்பினரும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

உச்ச நீதிமன்றத்தில் இருவரின் மனுக்களும், நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது நீதிபதிகள், “இருதரப்பினரும் நடந்ததை மறைத்துள்ளனர். தங்கள் இடையேயான தனிப்பட்ட மோதலுக்காக 11 ஆண்டுகள் காலம் இந்திய பார் கவுன்சில், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்துள்ளனர். இருதரப்பினருக்கு இடையேயான பகையைத் தீர்க்கும் இடமல்ல நீதித் துறை. இருதரப்பினருக்கும் தலா ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கிறோம். இந்தத் தொகையை ஆகஸ்ட் 21-ம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் 4 வாரங்களுக்குள் உச்ச நீதிமன்ற சட்ட சேவைகள் கமிட்டியிடம் செலுத்த வேண்டும்” என உத்தரவிட்டனர்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆதாரம் Dinamani https://www.dinamani.com/tamilnadu/2026/Aug/22/courts-are-not-the-place-to-settle-bilateral-animosity-supreme-court

Share Facebook X WhatsApp Telegram