சேர்க்கப்பட்டது: ஆகஸ்ட் 21, 2026 மாலை 11:34
மதுரை: மதுரை நகரில் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின்படி, இரவு நேரங்களில் போலீசார் வாகன சோதனை நடத்துகின்றனர்.
நேற்றுமுன்தினம் இரவு, வண்டியூர் செக்போஸ்டில் நடைபெற்ற வாகன சோதனையில், அவ்வழியே ஆட்டோவில் வந்தவர்கள் போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயன்றனர். அண்ணாநகர் போலீசார் நால்வரையும் பிடித்து, 3 வாள்களையும், ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில், அவர்கள் அண்ணாநகரைச் சேர்ந்த ராஜா (33), யாகப்பா நகரைச் சேர்ந்த சூரியபிரகாஷ் (26), சதீஷ்ராஜ் (23), செண்பகத் தோட்டத்தைச் சேர்ந்த விஜய் (38) என்பதும் தெரியவந்தது. நால்வரும் ஆயுதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதேபோல், நேற்று மாடக்குளம் போலீசார், கோச்சடை மேலக்கால் மெயின் ரோடு பகுதியில் வாகன சோதனை நடத்தினர். இதில் தப்பியோட முயன்ற அழகரடி பகுதியைச் சேர்ந்த ஜீவகன் (22) என்பவரைப் பிடித்து விசாரித்தபோது, அவர் மறைத்து வைத்திருந்த வாள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், வைகை வடகரையில் உள்ள ஆரப்பாளையத்தைச் சேர்ந்த சல்மான் (23) என்பவரைப் பிடித்து விசாரித்தபோது, அவர் மறைத்து வைத்திருந்த வாளும் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என தெரியவந்தது. இருவரும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.